நாடகங்கள்-1

மண் சோறு

காட்சி – 1

“நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…..” – ரேடியோவில் பாடல்.

அடுப்படியில் வேலை செய்துகொண்டே பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள் சுகந்தி. தற்செயலாக அடுப்படி ஜன்னல் வழியே யாரோ பார்ப்பதுபோல் தோன்றவே வெளியே எட்டிப்பார்த்தாள். கிணற்றடியிலிருந்து குமார் இவளையே பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு மெல்லிய புன்முறுவலுடன் அவன் துணி துவைக்கும் அழகை ரசித்தாள். அவனையும்தான். அவனும் இவளையே பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு சில நிமிடங்கள்தான். சுகந்திக்கு கோபம் வந்தது. அவனைப் பார்த்து சத்தமாக கத்தினாள்.

சுகந்தி: போதும்! போதும்! பொண்டாட்டிய ரசிச்சது. சீக்கிரமா துணியை துவைச்சிட்டு வந்து வேலைக்கு கிளம்பற வழிய பாருங்க…

குமார்: ஆமா! என்னய வேலை வாங்குறதுல எம் முதலாளிய கூட மிஞ்சிடுவேடி நீ. உழைச்சு உழைச்சு ஓடா தேயுறேன்.

சுகந்தி: உழைச்சாதானே சோறு திங்கறது. நிம்மதியா வாழுறது எல்லாம். சும்மா உட்கார்ந்திருந்தா பிச்சைதான் எடுக்கணும். இன்னைக்காச்சும் வீடு கிடைக்குதான்னு பாருங்க!

குமார்: ஆமா! எங்க கிடைக்கிது வீடு?… எல்லா பயலும் வீட்டுக்கு விலை கேட்டா… ஊருக்கே விலை சொல்றானுங்க…

சுகந்தி: உங்கப்பாவுக்கு போன் பண்ணீங்களா? என்னா சொன்னாரு? நிலம் வாங்க யாராச்சும் வந்தாங்களாமா?

குமார்: ம்…ம்… சொல்லிருக்காரு… 2,3 பேரு வந்து பார்த்துட்டு போயிருக்காங்க.

சுகந்தி: சீக்கிரமா முடிச்சுக் கொடுக்கச் சொல்லுங்க…

குமர்ர்: (முனகலாக) ஆமா… உன் அவசரத்துக்கு என்ன பண்றது?

சுகந்தி: என்னா முனவறீங்க?

குமார்: ஒண்ணுமில்ல..

(சுகந்தி முறைக்கிறாள்)

காட்சி – 2

குமார் சட்டை மாட்டிக் கொண்டு கிளம்புகிறான். வெளியில் யாரோ வருகிறார்கள். வீட்டு புரோக்கர் சலீம் பாய்.

பாய்: சார்!

குமார்: வாங்க பாய்!

பாய்: என்னா சார்? இன்னக்கி சாயங்காலம் வீடு பாக்க போலாமா?

குமார்: கொஞ்சம் நம்ம பட்ஜெட்டுக்குள்ள பாருங்க பாய். எல்லாம் ரேட்டு ஓவரா இருக்கு.

பாய்: உங்க ரேட்டுக்கு சிட்டி அவுட்டர்லதான் சார் கிடைக்கும். பரவாயில்லைனா சொல்லுங்க. சாயங்காலம் போலாம்!

குமார்: ம்…சரி…… போய் பாக்கலாம். வாங்க.

பாய்: சரி சார்! நாலு மணிக்கு வரட்டுங்களா?

குமார்: (யோசித்து)ம்… சரி வாங்க! நானும் சீக்கிரமா வர்ரேன்.

பாய்: சரி சார்! வர்ரேன்.

குமார்: வாங்க பாய்!

(பாய் கிளம்புகிறார். குமார் வேலைக்கு கிளம்புறான்.)

காட்சி – 3

டூவீலர் வண்டி போய்கொண்டிருக்கிறது. குமார் ஓட்டிக்கொண்டிருக்கிறான். பாய் பின்னால் அமர்ந்திருக்கிறார்.

குமார்: இந்த வீடு எவ்ளோ சொல்றாங்க?

பாய்: 18 சொல்றாங்க சார். நம்ம எப்படியும் பேசி 15க்கு முடிக்கலாம்.

குமார்: ம்… அதுக்கும் கீழ குறைக்க முடியாதா?

பாய்: பேசிப்பார்ப்போம் சார்.

(சிறிது நேரம் அமைதியாகப் போகிறது வண்டி)

பாய்: பணம் ஏற்பாடு பண்ணிட்டீங்களா சார்?

குமார்:..ம்… ஆபீஸ்ல ஒரு 10 லட்சம் லோன் ஏற்பாடு பண்ணிருக்கேன். ஊர்ல அப்பாகிட்ட சொல்லி நிலத்த விக்க சொல்லியிருக்கேன். அது எவ்ளோ வரும்னு தெரியலே. விளையுற நிலம்தான். ஆனா அங்க சுத்தி எல்லாரும் நிலத்த வித்துட்டாங்க. எல்லாம் ப்ளாட் போட்டுட்டாங்க. எங்க நிலத்தையும் வீடு கட்டி விக்கிற கன்ஸ்க்ட்ரக்சன் ஆளுங்க கேக்குறாங்க. ரேட்டுதான் ரொம்ப கம்மியா கேக்கிறாங்க… விலையுற நிலத்த விக்கணுமேன்னு அப்பாவுக்கு ரொம்ப வருத்தம். என்ன செய்யிறது? வேற வழியில்லை.

பாய்: ஊர்ல அப்பாவுக்கு வருமானம் எப்படிங்க சார்?

குமார்: அந்த நிலம்தான் சோறு போடுது. ஏதோ கொஞ்சநஞ்சம் வருமானம்தான் வருது. அதான் வித்திட்டு எங்கூட வந்திடச்சொல்லி சொல்றேன். அவருக்கு விவசாயம்தான் உசிறு… விடணுமேன்னு கவலை…

(யோசனையுடன் வண்டி ஓட்டுகிறான்.)

காட்சி – 4

ஊரில் அப்பா அம்மா வீட்டில் – அம்மா சமைத்துக்கொண்டிருக்கிறாள். அப்பா திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார். அம்மா காபி போட்டு எடுத்து வந்து அப்பாவிடம் கொடுக்கிறார். அப்பா அதை வாங்கியபடி…

அப்பா: அந்த ரமேஷ் பய ஆளுகள கூட்டியாந்தானா? இல்லியா?

அம்மா: ம்…ம்… வந்தான்… வந்தான். அவன் என்னா ஒரு குழி 100 ரூவாக்கி கேக்குறான்.

அப்பா: பாத்தியா! இந்தப் பக்கம் அவனச் சேக்கக்கூடாது. இவனோட கூட்டாளிப்பயன்னு பாத்தா அவன் நம்மலயே ஏய்க்கப் பாக்கிறான் பாரு! ஒரு குழி 250 ரூவாக்கி பக்கத்து நிலத்த குடுத்தான். அந்த வையாபுரிப்பய! இவன் அவன் சொந்தக்காரந்தானே! அங்கன வெல எம்புட்டுனு இவனுக்கு தெரியாது?

அம்மா: அதான்… ஒண்ணும் வேணாமுன்னு சொல்லி அனுப்பிட்டேன். நீங்க என்னா….? அந்த வயல விக்கறதுன்னே முடிவு பண்ணீட்டீயளா?

அப்பா: என்ன பண்றது? (சோகமாக) இவந்தான் சொன்னா கேக்க மாட்டேங்கறானே!

அம்மா: வித்துப்புட்டு….? அங்கன அவன்கூட வாழப்போறமா நாம? அவ நம்மள எப்படி கவனிச்சுக்குவான்னு உஙளுக்கு தெரியாது?

அப்பா: ஆமா… நம்ம பெத்த புள்ள நம்மள புரிஞ்சிக்கல. நீ வந்தவள குறை சொல்லுற.

(சோகமாக உட்கார்ந்திருக்கிறார்கள். பின்பு அப்பா எழுந்து சென்று வயலுக்குப் போகிறார். ஆசையுடன் வயலைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். வயல் விளைந்து நிற்கிறது. அருகே பக்கத்து வயல்களில் ஆங்காங்கே வீடுகள்.)

காட்சி – 5

(குமாரும், பாயும் ஒரு வீட்டைப் பார்க்கிறார்கள். ஒருவர் வீட்டைச் சுற்றி காண்பிக்கிறார். பின்பு இருவரும் கிளம்பி, ஒரு மளிகைக் கடையில் நின்று கலர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் மளிகைக் கடையில் அரிசி வாங்க வருகிறாள்.)

பெண்: என்னா மைக்கேலு? நேத்து கடைய வெள்ளென சாத்திப்புட்டியோ?

மைக்கேல்: ஆமாக்கா. ஒரு பெரிய காரியம்னு போயிட்டேன்.

பெண்: என்னா சாப்பாட்டரிசி வச்சிருக்க? 20 ரூவா அரிசி இருக்கா?

மைக்கேல்: இல்லக்கா. 32 ரூவா அரிசிதான் இருக்கு.

பெண்: என்னாது? 32 ரூவாயா? என்னா நாங்கல்லாம் வாழுறதா? சாவுறதா? நம்ம ஊர்ல விளையுற அரிசிய நாமளே வாங்க முடியாமால்ல கிடக்கு விலவாசி.

மைக்கேல்: ஆமாமா! எல்லாத்துலயும் விலய வாசிக்கத்தான் முடியும். எதையும் வாங்க முடியாது போல இருக்கு.

பெண்: ஏன் இப்புடி ஏறுது அரிசி விலை?

மைக்கேல்: ஏறாம என்னா பண்ணும்? விளச்சல்தான் நாளுக்கு நாள் குறையுதே. அங்க பாருங்க. விலையுற நிலத்த பூராம் வீடு கட்டி வித்தாக்கா, எங்கிருந்து விவசாயம் பண்றது? விவசாயி விவசாயம் பண்ண வுட்டத்தானே? அவன் உழைப்புக்கு தகுந்த காசு குடுத்தாதானே?

பெண்: விவசாயி ஏன் இப்படி ஏமாறணும்?

மைக்கேல்: என்னா பன்றது? அவந்தான் படிக்காத பயலாச்சே. படிச்சவுங்க எங்க விவசாயம் பண்றாங்க? படிச்சவுங்க, இவன் அறியாமையை பயன்படுத்தி இவனை ஏமாத்துறாங்க. இவன் உசிற கையில புடிச்சிக்கிட்டு மண்ணுல நிக்கிறான்.

(குமார் அதிர்ச்சியுடன் நிற்கிறான். தன் தந்தையின் மெல்லிய தேகம், உழைத்து களைத்த முகம் மண்வெட்டியுடன் அவன் கண்முன் தெரிகிறது.)

பாய்: போலாமா சார்?

குமார்: ம்… போலாம்… (பாட்டிலை வைத்துவிட்டு) காசு எவ்ளோப்பா? (மைக்கேலிடம் கேட்கிறான்).

மைக்கேல்: 20 ரூவாண்ணே. (பணம் கொடுத்துவிட்டு கிளம்புகிறார்கள்).

பாய்: இந்த வீட்ட எப்படியும் முடிச்சிடலாம் சார். 13க்கு கேட்டிருக்கேன். அவுங்க வீட்டுல பேசிட்டு சொல்றேன்னு சொல்லியிருக்காரு. வீடு உஙளுக்கு புடிச்சிருக்குள்ள?

குமார்: இல்ல பாய். வீடு வேணாம்…

பாய்: ஏன் சார்? வீடு புடிக்கலியா? வேற வீடு வேணா பார்க்கலாமா சார்?

குமார்: இல்லையில்லை வீடே இப்போதைக்கு வேணாம். அப்புறமா….. பாத்துக்கலாம்….. நான்….. சொல்றேன்.  உங்க கமிஷன் எவ்வளவு?

பாய்: பரவாயில்லை சார். அப்புறமா வாங்கிக்கிறேன். (பாய் முகம் சுருங்கிவிட்டது)

காட்சி – 6

(குமார் ஊரில் உள்ள தன் தந்தையின் வீட்டில் நிற்கிறான்.)

அப்பா: வாப்பா! என்ன திடுதிப்புனு? வீடு முடிவாயிடுச்சா?

குமார்: இல்லப்பா…. வீடு எல்லாம் ஒண்ணும் வாங்கல. நம்ம நிலத்தையும் விக்க வேணாம்.

(கேட்டுக்கொண்டே அம்மா கொல்லையிலிருந்து வருகிறாள்)

அம்மா: குமாரு! வாய்யா! என்னாச்சுய்யா? உனக்கும் உம்பொண்டட்டிக்கும் ஏதாச்சும் பிரச்சினையா?

குமார்: அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. நல்லா விளையுற நிலத்த ஏன் வித்துக்கிட்டு?

அப்பா: (மகிழ்ச்சியுடன்) ஆமாப்பா!… விலையுற நிலம்னுகூட பாக்காம விலைய இஷ்டத்துக்கு குறைச்சு கேக்கிறானுங்க. வடக்கால இருக்கிற நம்ம பொன்னாத்தாகூட வயல விக்கப் போறாளாம்.

குமார்: அது எவ்வளவு குழி இருக்கும்பா?

அப்பா: அது ஒரு 150 குழி கிடக்குதுய்யா. நல்லா விளையுற நிலம்.

குமார்: அதையும் நம்மளே வாங்கிக்கலாம்பா.

அப்பா: அப்புடியா? எப்புடிப்பா? ஏன் திடீர்னு இப்படி பேசுற? (புரியாமல் பார்த்தார் அப்பா)

குமார்: ஆமாப்பா…. நீங்க இருக்கிற வரைக்கும் இங்கயே விவசாயம் பண்ணுங்க…. அப்புறம் நான் வந்து விவசாயத்த பாக்குறேன். அப்பப்ப நான் ஊருக்கு வர்ரேன். எனக்கும் விவசாயம் பண்ணறதுக்கு சொல்லுக்கொடுங்க.

அப்பா: (தன் காரை பற்கள் தெரிய சிரித்தபடி) சரிப்பா! சொல்லித்தாரேன்!….அதென்ன பிரமாதம்!…

குமார்: நாம வயலுக்குப் போயி பாத்துட்டு வருவோமாப்பா? (வெகு நாட்களுக்குப் பின் குமாருக்கு தங்கள் நிலத்தைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை வந்தது)

அப்பா: ம்… போலாம்பா!  (அம்மாவிடம் திரும்பி) ஏ…. சீக்கிரம் சமச்சி வையி…. நாங்க வயலுக்கு போயிட்டு வாரோம்!

காட்சி – 7

(வயல் வெளியில் குமாரும் அப்பாவும் நிற்கிறார்கள். சிறிது நேரம் வரப்பில் நடந்துவிட்டு வயல் நடுவில் உள்ள ஒரு மரத்தடியில் நிற்கிறார்கள்.)

அப்பா: ரொம்ப நொந்து போயிருந்தேம்பா! நமக்கு சோறு போட்ட மண்ணு…. இதை விக்கணுமான்னு… ரொம்ப நொந்து போயிருந்தேன். .. நல்ல வேள…. என் வயித்துல பாலை வார்த்துட்டே. ஒம்பொண்டாட்டி ஒண்ணும் சொல்லலியா?

குமார்: அதெல்லாம் சொல்லுற விதத்துல சொன்னா புரிஞ்சுக்குவாப்பா. நீங்க இருக்கிற வரைக்கும் தாராளமா விவசாயம் பாருங்கப்பா… நான் அதுக்கு எல்லா உதவியும் செய்யுறேன்.

(அப்பா கீழேயிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து ஆசையுடன் பார்க்கிறார்…. குமார் அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.)

அப்பா: இது நம்ம சோறுப்பா…. நம்ம சோறு…. (அப்பாவின் கண்கள் கலங்கியிருக்கின்றன.  இருவரும் விளைந்து நிற்கும் வயலை பார்த்துக்கொண்டே நிற்கிறார்கள்)

விவசாயிகள் விவசாயிகளாகவே இருக்கட்டும்!
விளைநிலங்கள் விளைநிலங்களாகவே இருக்கட்டும்!
விளைநிலங்களை வீணா(டா)க்காதீர்கள்!

=============================================================================

Advertisements
3 பின்னூட்டங்கள்

3 thoughts on “நாடகங்கள்-1

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s