மாயக்கண்ணன்
(ஒரு தியானம்)உள்ளத்துள் காண்பாரே காண்பர் – ஊனக்
கண்களால் காண்பவர்க் காணாரே.
கண்கள் மூடி அமர்ந்திருந்தேன். மனம் ஒரு நிலையில் நிற்காமல் அலைந்து கொண்டிருந்தது. என்ன செய்யலாம்? எப்படித் தொடங்கலாம்? என்ற சிந்தனையே திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது. ஆனால் தொடக்கம் எதுவும் தோன்றுவதற்கான அறிகுறியே இல்லை. ஸ்ரீ ராமகிருஷ்ணரிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணர் வரை பலரது லீலா வினோதங்களை சிந்திக்கலாமா? என்று நினைத்தேன். உடனே எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை. திடீரென்று என் பின்னால் மெல்லிய கொலுசுச் சத்தம். ஆம்! அவன் தான்! கண்ணன்! மாயக்கண்ணன்! கண் திறந்து பார்த்தால் காணாமல் போய்விடுவான். எப்போதும் இப்படித்தான் செய்கிறான். இன்று விடுவதாயில்லை. என்ன ஆனாலும் சரி. கண்கள் திறப்பதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். இறுகக் கண்களை மூடிக்கொண்டு அவன் என்ன செய்கிறான் என்று உற்று பார்த்தவாறிருந்தேன். கண்களை மூடிக்கொண்டு எப்படி பார்ப்பது என்கிறீர்களா? தொடக்கத்தில் உள்ள இரு வரிகளைப் படியுங்கள். ஆனால் அது திருக்குறள் இல்லை.
மெதுவாக எனக்கு பக்கவாட்டில் வந்து எட்டிப் பார்த்தான் என் முகத்தை. என் மனம் குழையும்படியாய் ஒரு புன்னகையை உதிர்த்தான். உள்ளூரக்குழைந்திருந்தாலும் அதனை வெளிக்காட்டாது கண் மூடியிருந்தேன். பின் மெதுவாக என் முன்புறம் நடந்து வந்து நின்றான். பீதாம்பரம் ஒன்றை இடுப்பில் கட்டியிருந்தான். அதைவிடச் சுற்றியிருந்தான் என்றே சொல்லலாம். அதன் இடுக்கில் புல்லாங்குழல் ஒன்றை செருகியிருந்தான். கால்களில் சதங்கைகள். கைகளில் மின்னும் வளைகள் இரண்டிரண்டு. காதுகளில் குண்டலங்கள். நெற்றியில் சிவப்பு வண்ணப் பொட்டு. குட்டியாய் ஒரு வெள்ளை நாமம். நான் உட்கர்ந்திருக்கும்போது எவ்வளவு உயரமோ அவ்வளவு உயரம்தான் நின்றான். (இவன் உலகலாவிய பெருமாளாம்! சிரிப்புதான் வந்தது.) தலையில் கொண்டையும் அதில் செறுகிய மயிலிறகும். மலர் மாலையொன்று வாடாமல் கிடந்தது அவன் மார்பில். செடியில் பூக்காமல் அவன் மார்பில் பூத்ததுபோல் மகிழ்ந்து சிரித்தன மலர்கள்.
என்னையே உற்று பார்த்தான். இன்று இவன் கண் திறக்கமாட்டானோ? என்பதுபோல் முறைத்தான். அடுத்து என்ன செய்வான் என்று ஆவலுடன் பார்த்திருந்தேன். மெதுவாக என் அருகில், மிக அருகில் வந்து தன் (ப)பிஞ்சுக் கைகளால் என் கண்ணங்களை வருடினான். நான் கண் திறக்கவில்லை. பின் தன் வலது கையால் என் மூக்கைப் பிடித்தான். அதுவும் இரு விரல்களால் பிடிக்காமல் லட்டைப் பிடிப்பதுபோல் ஐந்து விரல்களாலும் என் மூக்கைப் பிடிக்க முயல்வதுபோல் பாவனை செய்தான். நான் கண் திறக்கவில்லை. பின் அவனுடைய வலது கையை எனது இடது தோளில் வைத்து என்னை ஆட்ட முயற்சித்தான். நான் கண் திறக்கவில்லை. பின் அவனது இடது கையை என் வலது தோளில் பிடித்தபடி அவனுடைய இடது காலைத் தூக்கி என் மடியில் வைத்து மெதுவாக அழுத்தினான். கொலுசுச் சத்தம் வரும்படியாக காலை ஆட்டினான். நான் கண் திறக்கவில்லை. “ம்…..க்…..க………கெ..கெ……………க்க” என்று சத்தம் செய்தான். என்ன பாஷை இது? புரியவில்லை. கெக்கேபிக்கேவென்று ஏதோ பேசினான். நான் கண் திறக்கவில்லை.
பின்பு தள்ளி நின்றுகொண்டு தன் வாயைக் கோணி எனக்கு பழிப்பு காட்டினான். தன் இரு தோள்களையும் முன்னும் பின்னும் ஆட்டியபடி கெக்கெக்கேவென்று சிரித்தான். பின் கொஞ்சம் ஒயிலாக நடந்து என் பின்புறமாக வந்தான். மெதுவாக என் முதுகைத் தொட்டான். தன் வலது கையால் என் முதுகை வருடினான்.பின்பு அவன் முதுகை என் முதுகில் வைத்து சாய்ந்து நின்றான். இடது கால் ஊன்றி நின்று வலது காலைத் தூக்கி இடது காலின் இடதுபுறம் கொண்டுவந்து ஒற்றைக் காலில் ஒய்யாரமாக என் முதுகில் சாய்ந்து நின்றுகொண்டான். அவன் கை அவன் இடுப்பிலிருந்த குழலை எடுத்தது. “ஆகா! குழலை எடுத்துவிட்டானே! என்ன செய்வது?” என்று நினைத்தேன். அவன் குழலை வாசித்தால் என்ன நடக்குமென்று எனக்குத் தெரியாதா? பட்டுத்துணி ஒன்றின் நுனியில் பிரிந்திருக்கும் ஒரு நூலை அதன் நுனியைப் பிடித்து இழுப்பதுபோல் என் உடலின் உள்ளிருந்து என் ஆன்மாவை உருவி எடுத்து, தன் குழலின் நுனியில் கட்டி அதில் ஒரு குஞ்சம் வைத்துத் தன் இடுப்பில் செருகிக் கொள்வான். வேண்டாம். வேண்டாம். அவனை அப்படிச் செய்யவிடக்கூடாது. அவன் குழலை வாசிக்கக்கூடாது என்று முடிவு செய்தேன்.
மெதுவாக குழலை அவன் உதட்டருகில் கொண்டு சென்றபோது, என் முதுகை இடம்வலமாக அசைத்தேன். என் மேல் சாய்ந்து நின்றதால் அவனும் ஆடினான். குழலினை உதட்டில் வைக்க முடியாமல் தடுமாறினான். கையை கீழிறக்கிவிட்டு கொஞ்சமாகத் தலையை பின்புறம் திருப்பி என்னை ஓரப்பார்வை பார்த்தான். கடைக்கண் பார்வை என்பது இதுதானோ? நான் ஆட்டத்தை நிறுத்தினேன். ஆனால் இன்னமும் கண் திறக்கவில்லை. சுதாரித்து நின்றுகொண்டு மீண்டும் குழலினை உதட்டருகில் கொண்டு சென்றான். நான் மேலும் வேகமாக முதுகை ஆட்டினேன். தடாலென விழுவதுபோல் சாய்ந்து, பின் சுதாரித்துக் கால் ஊன்றி நின்று என் பக்கம் திரும்பி முறைத்தான். குழலினால் என் தலையில் “சொட்” என்று ஒரு அடி கொடுத்தான். காய்ந்த மண் பானையில் ஒரு மெல்லிய மூங்கில் குச்சியால் அடிப்பதுபோல் “டொக்” என்று எனக்கு சத்தம் கேட்டது. “காய்ந்த மண் பானை” ஹூம்! நல்ல உதாரணம்தான் என் மண்டைக்கு.
அவன் கொஞ்சம் கோபமாக என் முன்புறம் வந்து நின்றான். என்ன செய்துவிடுவான்? பார்ப்போம் என்றிருந்தேன். மெதுவாக தன் தலையிலிருந்த மயிலிறகை எடுத்தான். என் அருகில் வந்தான். மயிலிறகால் நெற்றியிலிருந்து இதயம் வரைக்கும் மெதுவாக மிக மெதுவாக வருடினான். மயிலிறகு என் இதயத்திற்கு அருகில் வரும்போது முற்றிலும் உணர்விழந்து கண்களில் நீர் தெரிக்கக் கண்களைத் திறந்தேன். ஆஹா ஏமாந்து போனேனே! என்ன நடந்தது? எதிரே அவன் இல்லை. என் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தபடி இருக்க என் சிந்தனைகள் எல்லாம் செத்தே போயிருந்தன.
கோயிலில் கூட்டம் கொஞ்சம் அதிகரித்திருந்தது. என் எதிரே ஒரு சிறு பெண் குழந்தை மஞ்சள் பட்டுப் பாவடையும், சட்டையும், கொலுசுகளும் அணிந்து குறுக்கே ஓடியது. அந்தக் குழந்தையின் தாய் “ஷ்ஷ்…..” என்று ஒரு விரல் காட்டி, குழந்தையை “சப்தம் செய்யாதே” என்பதுபோல் ஜாடை காட்டி அழைத்துச் சென்றாள்.
அந்தக் குழந்தையின் கொலுசுச் சத்தம் அந்த மாயக்கண்ணனின் சதங்கை ஒலியைப் போலவே இருக்கிறதே!
– நீலவண்ணன்.